Wednesday, April 18, 2012

கதை சொல்லிகள்!

புத்தகமொன்றை வாசிக்கவேண்டும் என்று பார்ப்பவர்களைத் தூண்டுபவையாக இருப்பவை, ஓவியங்களே! இதைப் பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.


ஓவியங்கள் இல்லாத புத்தகமொன்றைப் படிப்பதும் முடியுமென்றாலும், அது - வாசிப்புப் பழக்கத்தை ஏற்கனவே கொண்டிருக்கும் ஒரு வாசகரால்தான் முடியும் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து.

இதுவரை புத்தகமொன்றை முழுமையாக வாசித்துப் பழக்கமில்லாத ஒருவரிடம் (பொதுவாக சிறுவர், சிறுமியர்) சித்திரங்களே இல்லாத, வெறும் எழுத்துக்களால் நிறைந்த ஒரு புத்தகத்தைக் கொடுத்துப் பாருங்கள். அவர்களது முகத்தில் தோன்றும் எதிர்மறையான பிரதிபலிப்பே அவர்களது ஆர்வமின்மையை எமக்குத் தெளிவாகப் புலப்படுத்திவிடும்.

இதுவே, சித்திரங்களால் நிறைந்திருக்கும் ஒரு கதைத்தொகுதியாக இருந்திருக்குமாயின் அவர்களது செயற்பாடு வேறுவிதமாக இருந்திருக்கும். கதைகளை வாசிப்பதில் ஆர்வமில்லாவிட்டாலும், முதலில் புத்தகத்தை எமது கைகளில் இருந்து வாங்கிக்கொண்டிருப்பார்கள்.

அதன்பின்னர், பக்கங்களைப் பிரித்துக்கொண்டுபோகும்போது சித்திரங்களின்மீது சிறிதுநேரம் கண்களை ஓடவிடுவார்கள். அவ்வாறு பக்கங்களைத் தட்டிக்கொண்டு போகும்போது சில ஓவியங்களில் அவர்களது கண்கள் நிலைக்கும்; ஆர்வத்தில் மிளிரும். சிலநேரம், அந்த ஓவியத்துக்குரிய கதையை வாசிக்கவும் ஆரம்பித்துவிடுவார்கள்.


இவ்வாறே, வாசிக்கும் ஆர்வமில்லாதவர்களையும் வாசிக்கத்தூண்டும் ஒரு கருவியாக ஓவியங்கள் இருப்பதை நாங்கள் காணலாம்.

பல சமயங்களில் கதைசொல்லியாக இருக்கும் இந்த ஓவியங்கள், வாசிப்புப் பழக்கத்தை சிறுவயதுமுதல் எம்மிடத்தில் விதைப்பதற்கு அருமையான தூண்டிகளாக இருக்கின்றன. இவ்வாறு சிறுவயதில் எம்மைக் கற்பனைக் குளத்தில் தள்ளிவிட்ட காரணிகளாக - அம்புலிமாமா, ரத்னபாலா, கோகுலம் போன்ற இதழ்களில் வெளிவந்த அதி அற்புதமான ஓவியங்களைக் குறிப்பிடலாம்.


கறுப்பு வெள்ளையிலும், இரு வர்ணங்களிலும், முழு வர்ணங்களிலும் வந்து எம்மைக் குதூகலிக்கவைத்து - வாசிப்புப் பழக்கத்திற்கு அடிமையாக்கிய அந்த அற்புதச் சித்திரங்களே - உண்மையான கதைசொல்லிகள்!

Wednesday, March 7, 2012

'கோகுலம் வாசகர் வட்டம்' ; ஓர் அறிமுகம்


'கோகுலம் வாசகர் வட்டம்' என்பது எங்களது ஒரு சிறிய முயற்சி.

வாசிப்புப் பழக்கத்தினை இளையவர்கள் மத்தியில் மீண்டும் முளைக்கச் செய்வதற்கான சிறு விதை.

இன்றைய 'நவீன' உலகம் என்று சொல்லப்படுகிற நவநாகரிக உலகில் வாசிப்பு என்பது ஏதோ ஒதுக்கப்படவேண்டிய - பிற்போக்குத்தனமான செயற்பாடு என்ற நிலை இளையவர்கள் மத்தியில் விஷமாக விதைக்கப்பட்டுவருகிறது.

இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சி, வாசிப்புப் பழக்கத்தை இளைய தலைமுறையினர் மத்தியிலிருந்து முற்றாக நீக்கிவிடும் ஒரு 'நல்ல'! காரியத்தை தன்னையறியாமலேயே செய்துவருகிறது.

எனவே, எம்மால் இயன்ற அளவு, வாசிப்புப் பழக்கத்தை எமது இளைய தலைமுறை மத்தியில் நிலைக்கச் செய்வதற்கு முயற்சி செய்வோம் என்ற எண்ணக்கருவில் இந்த 'கோகுலம் வாசகர் வட்டம்' என்னும் அமைப்பினை உருவாக்கியிருக்கிறோம்.

வாசிப்புப் பழக்கம் உள்ள ஒவ்வொருவரும் இதன் அங்கத்தவர்களே! எனவே, இந்த வலைப்பூவின் முதல் பதிவைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்களும் எங்களது 'கோகுலம் வாசகர் வட்டத்தின்' அங்கத்தவராகியிருக்கிறீர்கள்.

உங்கள் ஒவ்வொருவரையும் அன்போடு வரவேற்கிறோம்.

வாருங்கள்; எங்கள் மத்தியிலிருந்து வெகு வேகமாக விலகிச் சென்றுகொண்டிருக்கும் வாசிப்புப் பழக்கத்தை இழுத்துப்பிடித்து நிலைபெறச் செய்வோம்!